Breaking

Monday, March 7, 2022

காணாமல்போன மகனுக்காக 30 வருடங்களாக காத்திருக்கும் தாய் (கட்டுரை)

 

மகனுக்கான காத்திருப்பு

'என்மகன் வருவான்! குறிசொல்கிறவர்கள் சொல்கிறார்கள் அவன் உயிருடன் இருக்கிறான் என்று”. 86 வயது நிரம்பிய தாயின் நம்பிக்கை இது.


கணவன் இறந்து சரியாக ஒரு மாத காலத்தில் தனது மகனை தொலைத்த சுப்புலெட்சுமி பாட்டி ஊவா மாகாணத்தின் அப்புவளை தோட்டத்தில் வாழ்ந்து வருகிறார்.


1990 ஆம் வருடம் அவரது மகனுக்கு 19 வயது. தோட்டத்தில் அப்போது வாரத்திற்கு 2 நாட்கள்தான் வேலை. அந்த வருமானத்தில் தந்தையை இழந்த குடும்பம் ஒன்றை சமாளிக்க முடியாது. இளைஞர்கள் வெளியிடங்களுக்கு தொழில் தேடிச் சென்றனர். அவர்களில் சுப்புலெட்சுமி பாட்டியின் மகன் வசந்தராஜாவும் ஒருவர். 19 வயதான அவர் கரும்பு வெட்டுவதற்காக சியம்பலாண்டுவ என்ற பகுதிக்குச் சென்றுவருபவர். அன்றும் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஆரம்பத்தில் வழமைபோல் நண்பர்களுடன் சென்றவர் வீடுதிரும்பவில்லை.


1987இல் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையை 1990 இல்> இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியது. அப்போது தமிழ்> சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் வன்முறை வெடித்தது. இச்சந்தர்ப்பத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மொனறாகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பகுதிக்கு கரும்பு வெட்டச் சென்ற மலையக இளைஞர்கள் பலர் மீண்டும் வீடு திரும்பவில்லை.


அன்றும் போனவர்களில்; ஒருவர் திரும்பி வந்திருக்கிறார். அவர்  தங்கள் முதலாளியின் கரும்பு ஆலைக்குள் சென்றபோது> விரட்டியடிக்கப்பட்டதாகவும் பின்னர் காட்டுக்குள் ஓடிவந்து பதுங்கியிருந்து ஒரு வார காலத்தின் பின்னர் சொந்த கிராமத்திற்கு வந்ததாகவும்  தமது உறவினர்களிடம் கூறியுள்ளார். மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.


அவர்களில் ஒருவரான வசந்தராஜாவைத்தான் அவரது தாய் அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் 30 வருடங்களாக காத்திருக்கிறார். தாயார் சுப்புலெட்சுமியின் கையில் வசந்தராஜாவின் ஒரு புகைப்படம் மட்டுமே அடையாளமாக இன்று உள்ளது.


இப்போது கண்பார்வை குறைந்த நிலையில் அந்த தாய் தனது மகனை புகைப்படத்திலும் பார்க்க முடியவில்லை. மகனது படத்தை கையால் தடவிப்பார்த்து 'இது தான் போஸ்” என்கிறார். வசந்தராஜாவை அவர் போஸ் என்றுதான் அழைத்துள்ளார்.


மகனுடன் அவர் வாழ்ந்த அந்த வீட்டிலேயே இன்றும் தங்கியுள்ள அவர், அவரது ஏனைய பிள்ளைகளின் வீடுகளுக்கும் செல்வதை நிரந்தரமாக தவிர்த்துவிட்டார். தன் பிள்ளை வாழ்ந்த அந்த வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்த சுப்புலெட்சுமி பாட்டி, '1952ஆம் ஆண்டு இந்த வீட்டுக்கு வந்தேன். இந்த வீட்டில்தான் என் பிள்ளை இருந்தான்’’ என்கிறார்.


'என் மகன் அழகானவன், பலசாலியும்கூட. அவர் நன்றாக ஓடுவார், பந்தடிப்பார்’’ என்று கூறிப்பெருமைப்படுகிறார் அந்த தாய். 'இப்போது இருந்திருந்தால். எனக்கு எவ்வளவு பெரிய பலம்..’’ என்கிறார் ஏக்கத்துடன்.


மலையகத்தில் சுகயீனம் என்றால்கூட மருந்துமாத்திரைக்கு முதல் குறிபார்க்கும் பழக்கம் உண்டு. இதனை ‘சாமி பார்த்தல்’ என்றுதான் கூறுவார்கள். இவ்வாறு சாமி பார்க்கும்; இடங்களுக்குச் சென்று தன் பிள்ளை இருக்கின்றாரா? வருவாரா? என கேட்பதற்கு சுப்புலெட்சுமி பாட்டி தவறுவதே இல்லை.


பல இடங்களில் இவ்வாறு பார்த்தபோது, தன் மகன் உயிருடன் இருப்பதாகவே கூறியுள்ளதாக கூறும் சுப்புலெட்சுமி பாட்டி மூன்று தசாப்தங்கள் கடந்த பின்னரும் தன் மகன் வருவார் என காத்திருக்கின்றார்.


அன்று என்னதான் நடந்தது?

'நாட்டில் போர் சூழல் இருந்த காலங்களில் தோட்டப்பகுதிகளில் வேலை குறைவாகவே இருந்தது. அதனால் வெளியிடங்களுக்கு செல்வதற்கான அனுமதியை தோட்ட நிர்வாகம் வழங்கியது. ஆனால், அவர்கள் திரும்பி வருகின்றனரா, என்ன நடந்தது என்பது பற்றி ஒருபோதும் அவர்கள் அக்கறை காட்டவில்லை. இந்த சம்பவத்தின்போது கரும்பு வெட்ட சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று தோட்ட நிர்வாகத்திடம் சென்று முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை’’ என அப்போது தோட்டத் தலைவராக இருந்த வேலு நடராஜா குறிப்பிட்டார்.


தோட்ட நிர்வாகத்தின் கட்டளைகளுக்கு அமைய பொலிஸிலும் இந்த முறைப்பாடுகளை அப்போது நேரடியாகச் சென்று செய்ய முடியாது. நிர்வாகத்தின் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டாலே தவிர> பயம் காரணமாக மக்களும் அந்த காலத்தில் பொலிஸிற்கு செல்வதில்லை என ஊர் மக்களும் தெரிவித்தனர். ஆனால், நிர்வாகமும் கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் இவ்வாறான இழப்புகள் எங்கும் பதிவாகவில்லை. இதுபற்றி நடராஜா அவர்கள் குறிப்பிடும்போது.. 

வேலு நடராஜா

'மலையகத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய தரவுகள் முழுமையாக பதிவாகவில்லை என்பது பாரிய குறைபாடாகும். குறிப்பாக சியம்பலாண்டுவ சம்பவத்தைப் பற்றி எவ்வித தரவுகளும் இல்லை. அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்> பாதிக்கப்பட்டவர்கள்> சொத்துக்களை இழந்தவர்கள் பற்றிய தரவுகள் இதுவரை சேகரிக்கப்படவும் இல்லை என்பது பாரிய குறைபாடாகும்' என்றார்.


இவ்வாறான சம்பவங்களின்போது பொரும்பான்மை மக்களின் அன்றைய மனநிலை பற்றி ஆராய நாம் சியம்பலாண்டுவ பகுதிக்குச் சென்றோம். கரும்பு வெட்டும் தொழில் அன்றுபோலவே இன்றும் இயல்பாக நடைபெறுகின்றது. 95 வீதம் சிங்கள பெரும்பான்;மையை கொண்ட அந்த பிரதேசத்தில்> இச்சம்பவம் தொடர்பில் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்க யாரும் முன்வரவில்லை. 'அப்படி நடந்ததா?’’ என எம்மிடமே சிலர் திரும்பிக் கேட்கவும் செய்தனர்.


எனினும், அப்பகுதியில் அரச துறையில் பொறுப்பு வாய்ந்த பதவி வகிக்கும் ஒருவரும் சமாதான ஏற்பாடுகள் தொடர்பான அமைப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒருவருமான பண்டார (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவ்வாறு குறிப்பிட்டார்.


'1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். பலர் தொழிலை இழந்தனர். குறிப்பாக, ஹாலிஎல, பதுளை, பண்டாரவளை; இப்பிரதேசங்களில் இருந்து தொழில் நிமித்தம் வந்த சிலர் காணாமல் போய் இன்றுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் இருந்து இங்கு வந்த மக்களுக்கு கடந்த காலத்தில் பல பிரச்சினைகள் காணப்பட்டன. இதற்கு யார் காரணம் என எமக்குத் தெரியாது. கடந்த காலத்தை பற்றி பேசுவதில் பிரயோசனமும் இல்லை.


ஆனால், இன்று தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் மக்களும் தொழில் மற்றும் வியாபார நோக்கம் கருதி இப்பிரதேசத்திற்கு வந்து செல்கின்றனர். மலையகத்தில் இருந்து மட்டுமன்றி கிழக்கில் இருந்தும் வருகின்றனர். கரும்பு வெட்டுவதற்காக மட்டுமன்றி, சோள அறுவடை, நெற்செய்கை போன்ற தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். இன, மத முரண்பாடுகள் இன்றி இப்போது அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல வாழ்கின்றோம்' என்றார்.


ஆனால், அந்த பிரதேசத்தின் பெயரை கேட்டாலே இன்றும் பலர் அஞ்சுன்றனர். இது அந்தச் சம்பவத்தின் எதிரொலியாகும்.


எவ்வாறாயினும்> இச்சம்பவத்தை யாரும் தடுக்க முன்வரவில்லையா என்ற கேள்வி எம்முள் எழுகின்றது. இதுபற்றி வெளிப்படையாக பேச யாரும் முன்வராவிட்டாலும்> அங்கு ஏற்கனவே வேலைசெய்து அச்சத்தின் காரணமாக அங்கிருந்து வந்த ஷங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவ்வாறு குறிப்பிட்டார். 'நாம் அங்கு வேலைசெய்த காலத்தில் தமிழில் கதைப்பவர்களை சற்று வேறுவிதமாக பார்க்கும் நிலை காணப்பட்டது. ஆகவே நான் திரும்பிவந்துவிட்டேன். நான் வந்த இரண்டு மூன்று நாட்களில் அங்கிருந்த ஏனைய இளைஞர்களை விரட்டியும் கொன்றும் உள்ளனர். எனினும்> அதனை தடுக்க அங்கிருந்த யாரும் முன்வரவில்லை என அங்கிருந்து தப்பிவந்த எனது இன்னொரு மைத்துனர் என்னிடம் குறிப்பிட்டார். அவர் இப்போது உயிருடன் இல்லை. அவர்கள் வேலைசெய்த இடத்தில்கூட விரட்டியடிக்கப்பட்டு> இறுதியில் காட்டிற்குள் மறைந்து கிடந்து, சம்பவம் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் எம்மிடம் வந்து கூறும்வரை இதுபற்றி தெரியாது’’ என்றார்.


ஊவா மாகாணத்தில் பெருந்தோட்ட சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பணியாற்றும் ஊவா சக்தி அமைப்பின் தலைவர் சுரேஷ் நடேசனிடம் இதுபற்றி வினவினோம்.  

சுரேஷ் நடேசன்


ஊவா மாகாணத்தை பொறுத்தவரையில் இங்குள்ளவர்கள் யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும்> அதன் எதிரொலிகளாக பல பாதிப்புகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளனர். குறிப்பாக சியம்பலாண்டுவ பகுதி பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் பிரதேசமாகும். மலையக இளைஞர்கள் அங்கு அடிக்கடி வேலைக்கு சென்று வரும் பழக்கத்தில் அங்கு சென்றிருந்தாலும்> அவர்களுக்கான பாதுகாப்பான சூழல் அங்கு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. சிங்கள மக்களுடன் நெருங்கிப் பழகினார்கள். அந்த நம்பிக்கையில்தான் அவர்கள் சென்றார்கள். இங்கு பல இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோதும்> அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உரிய சாட்சிகள் இல்லை. அதனால், அவர்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் சூழல் உருவாகவில்லை.


இந்த இளைஞர்களை இன்னும் அவர்களுடைய குடும்பத்தார் எதிர்பார்த்து காத்திருக்கின்றர். இலங்கை போன்ற நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமாயின் இவ்வாறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டும். அப்போதுதான் சந்தேகமில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்’’ என்றார்.


குறிப்பாக மொனறாகலை மாவட்டம் தமிழ் பாரம்பரியத்தை கொண்டிருந்த போதும்> இந்த சம்பவம் காரணமாக தமது கலாசாரத்தை தொடர்ச்சியாக பேணமுடியாமல் போனதாவும்> அச்சுறுத்தல் காரணமாக தமது வாழ்வாதாரங்களை கைவிட்டு கிழக்கு மாகாணம் போன்ற பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். தமது தரவுகளின் பிரகாரம் மொனறாகலை மாவட்டத்தில் சுமார் 52 இளைஞர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என சுரேஷ் நடேசன் கூறுகின்றார்.


இற்றைக்கு 30 வருடங்கள் கழிந்தபோதும் அவர்கள் உயிருடன் திரும்பிவருவார்கள் என சுப்புலெட்சுமி பாட்டி போல பலர் காத்திருக்கின்றனர்.

- கலாவர்ஷ்னி கனகரட்ணம்

(இன்டர்நியுஸின் மனித ஆர்வக் கதைகள் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்> இந்த தாயைச் சுற்றியுள்ள கதை எழுதப்பட்டுள்ளது.)

No comments:

Post a Comment

Pages